கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் - அண்ணாமலை பேச்சு


கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான் - அண்ணாமலை பேச்சு
x

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

நெல்லை,

நெல்லை பாளையங்கோட்டையில் பொதுமக்களிடையே அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சியில் தாமிரபரணி நதியை அசுத்தமாக்கி விட்டனர். கங்கை நதியை போன்று தாமிரபரணியையும் சுத்தம் செய்வதற்கு தனி பட்ஜெட் போட வேண்டும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்துக்கும் இ்ல்லாத அளவாக தமிழகத்துக்கு கடந்த 9 ஆண்டுகளில் மத்திய அரசு ரூ.10 லட்சத்து 26 ஆயிரம் கோடி நிதியை வழங்கியுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியில் விவசாயத்தில் புரட்சி ஏற்பட்டுள்ளது. முன்பு 4 விளைபொருட்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஆதரவு விலை இருந்த நிலையில், தற்போது 24 விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.1,310 வழங்கிய நிலையில், தற்போது ரூ.2,183 வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் வழங்குகிறது. தமிழகத்தில் விவசாய நலன் திட்டங்களுக்கு ரூ.1,772 கோடியும், வேளாண்மை வளர்ச்சிக்கு ரூ.3,588 கோடியும், பயிர் காப்பீடு திட்டத்திற்கு ரூ.1,239 கோடியும் மத்திய அரசு வழங்கி உள்ளது. மது ஆலைகளை தி.மு.க.வினர் நடத்துவதால்தான் மதுக்கடைகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகின்றனர்.

மதுக்கடைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும்போது, ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க ஏன் கண்காணிப்பு கேமரா பொருத்தவில்லை? நீட் தேர்வை தி.மு.க.வினர் எதிர்ப்பதற்கு காரணம், மாணவர்கள் மீதுள்ள அக்கறையில் இல்லை. மாறாக அவர்கள் மருத்துவ கல்லூரிகளை நடத்துவதால்தான் நீட் தேர்வை எதிர்க்கின்றனர்.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 33 தனியார் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 22 மருத்துவக் கல்லூரிகள் தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்டதாகும். நீட் தேர்வு இருந்தால் இந்த கல்லூரிகளுக்கு மேலாண்மை இட ஒதுக்கீட்டில் இடம் வழங்க முடியாது என்பதால் அவர்கள் சொல்லித்தான் இந்த பிரச்சினையை எழுப்புகிறார்கள். கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது தி.மு.க.தான். இதை ஆதாரத்துடன் கூறுகிறேன்.

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந்தேதி முதல் இந்த திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் வரையிலும் வட்டி இல்லாமல் கடன் வாங்கிக் கொள்ளலாம். பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வர வேண்டும். இதற்கு நீங்கள் அனைவரும் உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story