வீட்டின் உரிமையாளர் மனைவியே 50 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்


வீட்டின் உரிமையாளர் மனைவியே 50 பவுன் நகைகளை மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 6 Oct 2023 6:45 PM GMT (Updated: 6 Oct 2023 6:45 PM GMT)

மன்னார்குடி அருகே 52 பவுன் நகைகள் கொள்ளைபோன வழக்கில் திடீர் திருப்பமாக 50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்து நாடகமாடியது அம்பலமானது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

வெளிநாட்டில் வேலை

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நெடுவாக்கோட்டை மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் அருணாச்சலம்(வயது 45).இவருடைய மனைவி லாவண்யா. வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அருணாச்சலம், கடந்த 20 நாட்களுக்கு முன்புதான் சொந்த ஊருக்கு வந்தார்.

கடந்த மாதம் 28-ந் தேதி மன்னார்குடி அருகே சோனாபேட்டை கிராமத்தில் வசித்து வரும் தனது தாயாரை பார்க்க அருணாச்சலம் தனது மனைவி லாவண்யா, மகளுடன் வீட்டை பூட்டி விட்டு சென்றார்.

வீட்டின் கதவு உடைப்பு

இதை தொடர்ந்து 30-ந் தேதி இரவு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்த நிலையில் கிடந்தது.

இதனைக் கண்ட அருணாச்சலம் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மன்னார்குடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அருணாச்சலம் வீட்டுக்குள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

52 பவுன் நகைகள் கொள்ளை

இதுகுறித்து அருணச்சாலம் கொடுத்த புகாரில் பீரோவில் இருந்த 52 பவுன் நகைகள் கொள்ளைபோனதாக தெரிவித்திருந்தார். கொள்ளையர்களை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்ததாக புதுச்சேரி பாகூரை சேர்ந்த பிரபாகரன்(36), காரைக்கால் டி.ஆர்.பட்டினம் பகுதியை சேர்ந்த ராஜ்மோகன்(35), வடுவூரை சேர்ந்த முத்து ஆனந்த்(39) ஆகிய 3 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

வீட்டில் நகைகளை மறைத்து வைத்திருந்தார்

இந்த விசாரணையில் 3 பேரும் அருணாச்சலம் வீட்டில் நகைகளை கொள்ளையடித்தது நாங்கள் தான். ஆனால் 2 பவுன் நகை, ஒரு வெள்ளி விளக்கு, 2 செல்போன்கள் மட்டுமே கொள்ளையடித்தோம் என தெரிவித்தனர்.

இதனையடுத்து அருணாச்சலம் மனைவி லாவண்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், 50 பவுன் நகைகளை வீட்டில் மறைத்து வைத்திருந்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரிடம் இருந்து 50 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பரபரப்பு

2 பவுன் நகையை கொள்ளையடித்த பிரபாகரன், முத்து ஆனந்த், ராஜ்மோகன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லாவண்யா 50 பவுன் நகைகளை ஏன் மறைத்து வைத்திருந்தார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

50 பவுன் நகைகளை வீட்டின் உரிமையாளரின் மனைவியே மறைத்து வைத்துக்கொண்டு கொள்ளை்போனதாக நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story