ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த12 அரசு பள்ளிக்கூடங்கள், கூடலூர் நகராட்சி வசம் ஒப்படைப்பு
ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 12 அரசு பள்ளிக்கூடங்கள், கூடலூர் நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கூடலூர்: ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 12 அரசு பள்ளிக்கூடங்கள், கூடலூர் நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நகராட்சியிடம் ஒப்படைக்க உத்தரவு
கூடலூர் நகராட்சியில் 21 வார்டுகள் உள்ளது. இதில் பெரும்பாலான வார்டுகளில் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிக்கூடங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பராமரிப்பு மற்றும் அடிப்படை வளர்ச்சி பணிகள் நடைபெற்று வந்தது.
இந்தநிலையில் நகராட்சி பகுதிக்குள் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களை அந்தந்த நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
12 அரசு பள்ளிக்கூடங்கள்
அதன்படி கூடலூர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த முதல் மைல், நந்தட்டி, வண்டிப்பேட்டை, அத்திப்பாளி, கோழிப்பாலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் மற்றும் துப்புக்குட்டிபேட்டை, ஹெல்த் கேம்ப், சளி வயல், அல்லூர் வயல், ஏழுமுரம், மங்குழி, கோடமூலா ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள் என மொத்தம் 12 அரசு பள்ளிக்கூடங்கள் கூடலூர் நகராட்சி நிர்வாகத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், கூடலூர் நகராட்சி நிர்வாகத்துக்கு ஒப்படைப்பு கடிதத்தை அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பள்ளிக்கூடங்களை பெற்றுக் கொண்டதற்கான உறுதிச்சான்றிணை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:- 'தமிழக அரசின் உத்தரவின்பேரில் நகராட்சி பகுதிக்குள் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளிக்கூடங்கள் நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே, இனிவரும் நாட்களில் மேற்கண்ட 12 அரசு பள்ளிக்கூடங்களிலும் பராமரிப்பு மற்றும் கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட அடிப்படை வளர்ச்சி பணிகள் கூடலூர் நகராட்சி நிர்வாகம் மூலம் மேற்கொள்ளப்படும்' என்றனர்.