ஆன்லைன் வர்த்தகத்துக்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து போராட்டம்; நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


ஆன்லைன் வர்த்தகத்துக்கு சாதகமாக செயல்படும்  தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து போராட்டம்;  நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x

ஆன்லைன் வர்த்தகத்துக்கு சாதகமாக செயல்படும் தயாரிப்பு நிறுவனங்களை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஈரோடு

தமிழ்நாடு நுகர்பொருள் வினியோகஸ்தர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாநில செயற்குழு கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் எம்.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாநில சேர்மன் மோகன் சங்கர், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுரவ ஆலோசகர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

ஆன்லைன் வணிகத்துக்கு குறைந்த விலையும், பாரம்பரிய வினியோகஸ்தர்களுக்கு அதிக விலையும் நிர்ணயம் செய்யும் தயாரிப்பு நிறுவனங்களின் போக்கை கண்டிக்கிறோம். இந்த நிலை தொடர்ந்தால் சில்லறை வணிகர்களோடு மாநில அளவில் புறக்கணிப்பு போராட்டம் நடைபெறும். சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைந்து எளிமைப்படுத்த வேண்டும்.

வணிகர் நல வாரியத்தால் வழங்கப்படும் உதவித்தொகையை அதிகப்படுத்த வேண்டும். ஆன்லைன் வணிகத்தை முறைப்படுத்த மத்திய அரசு ஒரு குழு அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில கவுரவ ஆலோசகர் காதர் முகைதீன், துணைத்தலைவர் ஞானவேல் மற்றும் நுகர்பொருள் வினியோகஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டார்கள். முடிவில் மாநில பொருளாளர் பழனியப்பன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story