பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் - அமைச்சர் சேகர் பாபு


பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம் - அமைச்சர் சேகர் பாபு
x

கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சென்னை,

சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி ரூபாய் செலவில், 40 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணி கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இந்த நிலையில், கிளாம்பாக்கத்தில் நடைபெற்று வரும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலைய பணிகளை அமைச்சர்கள் சேகர் பாபு, அன்பரசன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் துறை ஒதுக்கப்பட்ட அடுத்த நாளே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சேகர் பாபு ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் சேகர் பாபு கூறியதாவது:-

கிளாம்பக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பிறகு மக்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை வசதிகள், போக்குவரத்து நெரிசல் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. சுமார் 88 ஏக்கரில் அமையவுள்ள இந்த பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள், வெளியூர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் என 250க்கும் மேற்பட்ட பேருந்துகள் நிறுத்தப்படவுள்ளது.

புயல், மழையால் கிளாம்பாக்கம் பேருந்து நிலைய கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலைய பணிகளை விரைவாக முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறப்பது கடினம்.

இன்றைய ஆய்வில், பல்வேறு புதிய பணிகளை ஏற்படுத்த அதிகாரிகள், அமைச்சர்கள் வலியுறுத்தியுள்ளதால், அந்த பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, கோயம்பேடு, கிளாம்பாக்கம் போன்ற பேருந்து நிலையங்கள் போல், இன்னும் 2 அல்லது 3 அமைத்தால் தான் மக்களுக்கு உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story