டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும்மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை


டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும்மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 8 Oct 2023 3:30 AM IST (Updated: 8 Oct 2023 3:30 AM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வருகிற புகாரை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

கோவை

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக வருகிற புகாரை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கோவையில் அமைச்சர் முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

அடிக்கல் நாட்டு விழா

கோவை காந்திபுரம் பகுதியில் ரூ.2¾ கோடியில் ஆம்னி பஸ் நிலையம், 69-வது வார்டில் ரூ.2¼ கோடியில் மழைநீர் வடிகால் வசதியுடன் கூடிய நடைபாதை, வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ரூ.1 கோடியில் சுகாதாரமான உணவு தெரு அமைக்கும் பணி உள்பட ரூ.13 கோடியில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழா மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் அரசின் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதல்-அமைச்சரின் கள ஆய்வு விரைவில் கோவை உள்பட பல மாவட்டங்களில் நடைபெற இருக்கின்றது.

போக்குவரத்து நெரிசல்

மாணவ-மாணவிகள் தடையின்றி கல்வி பெற வேண்டும் என்பதற்காக கல்வி கடன் உதவி திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் கடனுதவி பெற 3 ஆயிரம் பேருக்கு மேல் பதிவு செய்து இருக்கின்றனர்.

கோவையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் வழியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசல்களை தீர்க்க அதிகாரிகளுடன் கலந்து பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

சொத்து வரி

மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தாதவர்களுக்கு 1 சதவீத அபராத வட்டி விதிப்பதற்கு கால அவகாசம் கொடுக்க சொல்லலாம். அதேநேரத்தில் வரிகளை உரிய காலத்தில் செலுத்தி விட்டால் அபராத வட்டி விதிப்பை தவிர்த்து விடலாம். உரிய காலத்தில் வரிகளை செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகையும் கிடைக்கும்.

மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் வருவதை தொடர்ந்து அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கான ரசீது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரே மாதிரியான மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகார்களை தொடர்ந்து புதிய மதுபானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்கவும், அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோர்ட்டு உத்தரவின்படி டாஸ்மாக் கடைகளுக்கான பார் ஏலம் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் கிராந்தி குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மேயர் கல்பனா ஆனந்தகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கல்விக்கடன்

பின்னர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சின்னவேடம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் அரசு சார்பில் மாணவர்களுக்கான கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 15 மாணவர்களுக்கு ரூ.1 கோடியே 2 லட்சம் மதிப்பில் கல்விக்கடன் பெறுவதற்கான ஆணைகளை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி வழங்கினார்.


Next Story