மைசூருவில் இருந்து வந்த பஸ்சில் ஐ.டி.ஊழியர் திடீர் சாவு
மைசூருவில் இருந்து வந்த பஸ்சில் பயணித்த ஐ.டி.ஊழியர் திடீரென உயிரிழந்தார்.
தென்காசி மாவட்டம் ஆவுடையனூர் அழகம்பெருமல்லூரைச் சேர்ந்தவர் அந்தோணி ஜெயசிங். இவரது மகன் ஐசக் அகஸ்டின் (வயது 23). இவர் மைசூருவில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மைசூருவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். டாக்டர்கள் அவருக்கு அல்சர் நோய் இருப்பதாக கூறியுள்ளனர். அதை அறிந்ததும் அந்தோணிஜெயசிங் விடுமுறை எடுத்து ஊருக்கு வருமாறு கூறியுள்ளார். எனவே அவர் சொந்த ஊருக்கு செல்வதற்காக மதுரை வரும் பஸ்சில் அங்கிருந்து வந்தார். நேற்று முன்தினம் காலை பஸ் மதுரை மாட்டுத்தாவணி வந்ததும் ஐசக்அகஸ்டின் மட்டும் கீழே இறங்கவில்லை. எனவே பஸ் கண்டக்டர் அவரை எழுப்பும் போது அவர் இறந்தது தெரியவந்தது. இது குறித்து கண்டக்டர் அவரது உறவினர்கள் மற்றும் மாட்டுத்தாவணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது இறப்பு குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.