கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி


கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலி
x

கருப்பூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார்.

சேலம்

கருப்பூர்:-

கருப்பூர் அருகே கல்குவாரி குட்டையில் மூழ்கி ஐ.டி.ஐ. மாணவர் பலியானார்.

ஐ.டி.ஐ. மாணவர்

கருப்பூர் அருகே உள்ள வெள்ளாளப்பட்டி அகராதிபட்டினம் பகுதியை சேர்ந்தவர் கலைவாணன். இவர் உடல்நலக்குறைவால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவருடைய மகன் பூவரசன் (வயது 17). இவர் தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் வசித்து வந்தார். இவர் சேலம் கோரிமேட்டில் உள்ள ஐ.டி.ஐ.யில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று விடுமுறை என்பதால் தனது நண்பர்களுடன் கோரிமேடு பகுதியில் உள்ள கல்குவாரி குட்டைக்கு பூவரசன் நீச்சல் பழக சென்றுள்ளார். குட்டையில் இறங்கிய பூவரசன் தண்ணீரின் அடிப்பகுதியில் உள்ள கற்களில் எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்டு நீரில் மூழ்கினார். இதனால் அவர் தண்ணீருக்கு வெளியே வரமுடியாமல் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார்.

உடல் மீட்பு

இதனிடையே குட்டையில் மூழ்கிய மாணவர் பூவரசன் வெகு நேரமாக வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என கூச்சல் போட்டனர்.

இதையடுத்து அங்கு வந்தவர்கள், கருப்பூர் போலீஸ் நிலையம் மற்றும் ஓமலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தண்ணீரில் மூழ்கி இறந்த மாணவர் பூவரசனின் உடலை மீட்டனர். பின்னர் அந்த மாணவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வெள்ளாளப்பட்டி கிராமத்தில் கல்குவாரி குட்டையில் மூழ்கி மாணவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story