பழசை இடிச்சு நாளாச்சு...புதிய குடியிருப்பு என்னாச்சு...


பழசை இடிச்சு நாளாச்சு...புதிய குடியிருப்பு என்னாச்சு...
x
தினத்தந்தி 2 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-03T00:15:21+05:30)

பொள்ளாச்சியில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்டப்படுமா? என்று வாடகை வீட்டில் வசித்து வரும் போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் புதிய போலீஸ் குடியிருப்பு கட்டப்படுமா? என்று வாடகை வீட்டில் வசித்து வரும் போலீசார் எதிர்பார்த்துள்ளனர்.

போலீஸ் குடியிருப்பு

பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் போலீஸ் குடியிருப்பு இருந்தது. 3 தளங்களுடன் கட்டப்பட்ட இந்த குடியிருப்பில் 240 போலீசாருக்கும், 12 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டு இருந்தன. இங்கு பொள்ளாச்சி கிழக்கு, மேற்கு, தாலுகா, மகாலிங்கபுரம், நெகமம், கோமங்கலம், வடக்கிபாளையம், மகளிர் போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசார் மட்டுமின்றி ஆனைமலை, கிணத்துக்கடவு, கோட்டூர், ஆழியாறு போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீசாரும் குடும்பத்துடன் தங்கி இருந்தனர்.

சமூக விரோத செயல்

இதற்கிடையில் குடியிருப்பு கட்டப்பட்டு 37 ஆண்டுகளை கடந்து விட்டதால் பழுதடைந்து காணப்பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு வசித்து வந்த போலீசாருக்கு நோட்டீசு அனுப்பப்பட்டது. அவர்கள், காலி செய்துவிட்டு, வாடகை வீடுகளில் குடியேறினர். தொடர்ந்து பழைய குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் புதிதாக கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் போலீஸ் குடியிருப்பு இருந்த இடம், மைதானம் போன்று காட்சி அளிக்கிறது. மேலும் புதர் செடிகள் வளர தொடங்கி விட்டது. அங்கு இரவு நேரங்களில் அமர்ந்து மது அருந்துதல் போன்ற சமூக விரோத செயல்களும் நடைபெறுகிறது.

பாதுகாப்பு இல்லை

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

எங்களுக்கு குடியிருப்பு இல்லாததால் வாடகை வீடுகளில் வசித்து வருகிறோம். இதனால் மிகவும் சிரமமாக உள்ளது. பணி நிமித்தமாக அடிக்கடி வெளியூருக்கு செல்ல வேண்டி இருப்பதால் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் காணப்படுகிறது. இதே, போலீஸ் குடியிருப்பில் வசித்தால் மிகவும் தைரியமாக இருக்கலாம். எனவே வருகிற பட்ஜெட்டில் போலீஸ் குடியிருப்பு கட்டுவதற்கு நிதி ஒதுக்கி, விரைவில் பணிகளை தொடங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ரூ.66 கோடியில்...

காவல் வீட்டு வசதி வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

பொள்ளாச்சியில் பழுதடைந்த நிலையில் இருந்த போலீஸ் குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டு உள்ளது. புதிதாக கட்டுவதற்கு ரூ.66 கோடி கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டு உள்ளது. நிதி கிடைத்ததும் பணிகள் தொடங்கும். அதில் இன்ஸ்பெக்டர்களுக்கு 10 வீடுகள், சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு 30 வீடுகள் மற்றும் போலீசாருக்கு 226 வீடுகள் சேர்த்து 266 வீடுகள் கட்டப்படுகிறது. மேலும் லிப்ட் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story