ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது


ஜாக்டோ- ஜியோ போராட்டம்: தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் கைது
x

சென்னையில் நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற 60 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும், ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும், அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலிபணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ- ஜியோ சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி கல்வி அலுவலகம் (டி.பி.ஐ. வளாகம்) முன்பு மறியல் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இதனால் வளாகம் வாசல் மூடப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மாநில ஒருங்கிணைப்பாளர் மாயவன் தலைமையில் வந்த அமைப்பினர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி மறியல் செய்ய வந்தனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் இவர்களை மறியல் செய்யவிடாமல் பஸ்களில் ஏற்றி சென்று தேனாம்பேட்டையில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்தனர். 60 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையை போல தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. கோவையில் 780 பேரும், திருச்சியில் 250 பேரும்,நெல்லையில் 148 பேரும், மதுரையில் 510 பேரும், புதுக்கோட்டையில் 588 பேரும் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுபோல மற்ற மாவட்டங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.


Next Story