ரேஷன் அரிசி கடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை


ரேஷன் அரிசி கடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை
x

ரேஷன் அரிசி கடத்திய 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 2015-ம் ஆண்டு நாங்குநேரி டோல்கேட் அருகில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த கார், லோடு வேனை வழிமறித்து சோதனை செய்தனர். இதில் சுமார் 3 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக காரில் இருந்த கன்னியாகுமரி மடிசல்போஸ்டு பரப்புவிளை வீடு பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் விவேக் (வயது 25), மருதம்கோடு பகுதியைச் சேர்ந்த சூசை மகன் கிளிட்டஸ் (30), மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த நாசர் மகன் ஜவகர்கான் என்ற ஜாபர்கான் (28) ஆகியோரையும், இந்த வழக்கில் தொடர்புடையதாக நெல்லை பேட்டையைச் சேர்ந்த முருகனையும் (55) போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நெல்லை 2-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை நீதிபதி ஆறுமுகம் விசாரித்து, குற்றம் சாட்டப்பட்ட விவேக், கிளிட்டஸ், ஜாபர்கான் ஆகிய 3 பேருக்கும் தலா 45 நாட்கள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.3 ஆயிரம் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பு கூறினார். முருகனுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜூடு ஏஞ்சலியோ ஆஜரானார்.


Next Story