கறம்பக்குடி, ஆலங்குடியில் சீறிப்பாய தயாராகும் ஜல்லிக்கட்டு காளைகள்


ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் கறம்பக்குடி, ஆலங்குடி பகுதியில் உள்ள காளைகளுக்கு நீச்சல் மற்றும் பாய்ச்சல் பயிற்சி மும்முரமாக அளிக்கப்பட்டு வருகிறது.

புதுக்கோட்டை

ஜல்லிக்கட்டு

தமிழ்நாட்டில் கலாசாரம் மற்றும் பண்பாடு சார்ந்து கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல் திருநாளாகும். பண்டைய தமிழ் இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்று போற்றப்படும் காளை அடக்கும் நிகழ்ச்சி தமிழர்களின் வாழ்வியல் கலாசாரங்களில் ஒன்றாகவே இருந்துள்ளது. அதனால் தான் தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை, தேனி, திருச்சி, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விமரிசையாக நடைபெற்று வருகின்றன.

மெரினாவில் போராட்டம்

இதில், மதுரை அவனியாபுரம் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக அளவில் பிரசித்தி பெற்றவையாக அமைந்துள்ளது. வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஜல்லிக்கட்டை பார்ப்பதற்காக தமிழ்நாட்டிற்கு வருவது ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதித்ததை எதிர்த்து மெரினாவில் நடைபெற்ற போராட்டத்திற்கு பிறகு ஜல்லிக்கட்டுக்கு தனி மவுசு ஏற்பட்டு உள்ளது. பெருநகரங்களில் தகவல் தொழில்நுட்ப பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் கூட தற்போது ஜல்லிக்கட்டில் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர். பலர் மாடு பிடி வீரர்களாகவும் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நீச்சல், பாய்ச்சல் பயிற்சி

இந்தநிலையில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. இருப்பினும் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளில் காளை வளர்ப்போர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, கருக்காகுறிச்சி, காட்டாத்தி, ரெகுநாதபுரம், முள்ளங்குறிச்சி, பிலாவிடுதி, அம்மானிப்பட்டு, மழையூர், ஆலங்குடி, திருவரங்குளம், கபளம், மேட்டுப்பட்டி, வன்னியன்விடுதி, அரையப்பட்டி, கோவிலூர், பாப்பான்விடுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பொங்கல் விழாவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் காளைகளை தயார்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நீச்சல், பாய்ச்சல் மற்றும் ஓட்டப் பயிற்சிகள் மும்முரமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சத்தான உணவுகளும் வழங்கப்படுகிறது.

விதிமுறைகளை தளர்த்த வேண்டும்

இதேபோல் மாடுபிடி வீரர்களும் ஓட்டம் மற்றும் மூச்சு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மாடுபிடி வீரர்களுக்கென சமூக வலைத்தள குழுக்கள் உருவாக்கப்பட்டு தகவல் பரிமாற்றங்கள் நடைபெற்று வருகிறது. எனவே அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நடைமுறைகளை தொடங்க வேண்டும் என காளை வளர்ப்போர் மற்றும் மாடுபிடி வீரர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story