ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x

ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

கொண்டாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கில் மனுக்களை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்டு, ஜல்லிக்கட்டை நடத்தலாம் என்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து திருச்சி, புதுக்கோட்டை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்ததுடன், இனிப்புகளும் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்த தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்து, தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தினர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகே ஜல்லிக்கட்டு காளையுடன் வந்து பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இதில் திருச்சி ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கத்தின் மாநில தலைவர் டி.ஒண்டிராஜ், மாநில செயலாளர் சூரியூர் எஸ்.ராஜா, இளைஞர் அணி தலைவர் ராஜேஷ், மாவட்ட தலைவர் எம்.மூக்கன், பொருளாளர் செங்குறிச்சி பழனி, திருப்பதி, கணேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு

ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சங்க மாநில இளைஞரணி தலைவர் ராஜேஷ்:- இந்த தீர்ப்பை மிகவும் எதிர்பார்த்து இருந்தோம். ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு முதல் நீதிமன்றம் பல வழக்குகளை சந்தித்துள்ளது. கீழ் கோர்ட்டு முதல் உச்சநீதிமன்றம் வரை இந்த வழக்குகளுடனே பயணித்துள்ளோம். அனைத்து கோர்ட்டுகளிலும் இதுவரை நடந்த வாதத்தில் ஜல்லிக்கட்டு நமது பண்பாடு, கலாசாரம் என்ற வாதத்தை புரிந்து கொள்ளவே இல்லை. ஆனால் இந்தமுறை உச்சநீதிமன்றத்தில் 5 பேர் கொண்ட அமர்வில் ஜல்லிக்கட்டு சாதி, மத, இனத்துக்கு அப்பாற்பட்டு கலாசாரம் சார்ந்த விஷயம் என்பதை தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். இதற்கு பல்வேறு ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது. இதையடுத்தே உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு பண்பாடு, கலாசாரம் சார்ந்த விஷயம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அளித்து இருக்கிறது. மேலும், தமிழக அரசு ஜனாதிபதியிடம் முறைப்படி ஒப்புதல் பெற்று சட்டம் இயற்றி இருக்கிறது என்று கூறி இருக்கிறார்கள். ஆகவே இந்த தீர்ப்பு ஜல்லிக்கட்டு ஆர்வலராகிய எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது. எங்களது 15 ஆண்டு சட்ட போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இன்னும் 1,000 ஆண்டுகள் நமது பண்பாடும், கலாசாரமும் தொடர வேண்டும். இதற்காக முயற்சி மேற்கொண்ட தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், ஜல்லிக்கட்டுக்காக குரல் எழுப்பிய அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.


Next Story