கரூர் மாவட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி


கரூர் மாவட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி
x

கரூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கிய ஜமாபந்தியில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

கரூர்

கரூர்,

ஜமாபந்தி

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று 1431-ம் பசலி ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் என்ற ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கொண்டார்.இதில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தண்டாயுதபாணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மனுக்கள் பெறப்பட்டன

கரூர் தாலுகா அலுவலகத்தில் ேநற்று ஜமாபந்தி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தாஜுதீன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். இதில், தாசில்தார் பன்னீர்செல்வம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் தனசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

குளித்தலை

குளித்தலை, தோகைமலை, நங்கவரம், குறுவட்டத்தை சேர்ந்த கிராமங்களுக்கு வருவாய் நிர்வாக தீர்வாயம் (ஜமாபந்தி) நேற்று தொடங்கியது. குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஜமாபந்தியை குளித்தலை கோட்டாட்சியர் புஷ்பாதேவி தலைமை தாங்கி தொடங்கி வைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். இந்த ஜமாபந்தியின் முதல் நாளான நேற்று தோகைமலை குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இதில் அதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நொய்யல்

புகழூர் தாலுகாவிற்கு உட்பட்ட தென்னிலை, க.பரமத்தி, புகழூர் ஆகிய 3 வருவாய் குறு வட்டத்திற்கான ஜமாபந்தி புகழூர் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் வருவாய் கோட்டாட்சியர் ரூபினா தலைமை தாங்கினார். இதில், பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா, பட்டா மாறுதல், பட்டாவில் பெயர் சேர்த்தல், ரேஷன் கார்டில் பெயர் மாற்றம் என மொத்தம் 30 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 3 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. பின்னர் மனு கொடுத்த அனைவருக்கும் கரூர் மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. இதில், புகழூர் நகராட்சித் தலைவர் சேகர் என்கிற குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் கார்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம்

கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் லியாகத் தலைமையில் நடந்தது. தாசில்தார் முருகன் முன்னிலை வகித்தார். நேற்று கட்டளை வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு வகையான 32 மனுக்கள் பெறப்பட்டன. இதில் வருவாய்த்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

203 வருவாய் கிராமங்களுக்கு...

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, கடவூர், மண்மங்கலம் மற்றும் புகழூர் ஆகிய வட்டங்களை சேர்ந்த 203 வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நேற்று தொடங்கி உள்ளது. இந்த ஜமாபந்தி இன்று, நாளை, நாளைமறுநாள் மற்றும் 14 மற்றும் 15-ந்தேதிகளிலும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story