ஜமாபந்தி நிகழ்ச்சி 6 நாட்கள் நடக்கிறது
திருவாரூர் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி 6 நாட்கள் நடக்கிறது.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி 6 நாட்கள் நடக்க உள்ளது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஜமாபந்தி
திருவாரூர் மாவட்டத்தில் 1432-ம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீா்வாயம் கணக்கு முடித்தல் நிகழ்ச்சி (ஜமாபந்தி) வருகிற 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை தவிற மற்ற நாட்கள் நடக்கிறது.
முத்துப்பேட்டை தாலுகாவில் வருகிற 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மாவட்ட கலெக்டர் தலைமையிலும், நன்னிலம் தாலுகாவில் 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவாரூர் தாலுகாவில் 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை திருவாரூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும் நடக்கிறது.
கூத்தாநல்லூர்
கூத்தாநல்லூர் தாலுகாவில், 24-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் தலைமையிலும், குடவாசல் தாலுகாவில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நல அலுவலர் தலைமையிலும், வலங்கைமான் தாலுகாவில் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், நீடாமங்கலம் தாலுகாவில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் தலைமையிலும், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உதவிஆணையர் (கலால்) தலைமையிலும் நடக்கிறது.
மன்னார்குடி தாலுகாவில் 24-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை மன்னார்குடி வருவாய் நீதிமன்றம் தனித் துணை கலெக்டர் தலைமையிலும் நடக்கிறது. இதில் பொதுமக்கள் தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை தங்களது தாலுகாவிற்குரிய வருவாய் தீர்வாய அலுவலரிடம் நேரில் அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.