மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனை
புதுக்கோட்டையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி மல்லிகை பூ கிலோ ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது.
தீப திருவிழா
முக்கியமான பண்டிகை நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்தப்படியே உள்ளது. இந்த நிலையில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நேற்று பூக்கள் விலை சற்று உயர்ந்திருந்தது. புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. இது குறித்து வியாபாரிகள் கூறுகையில்,
''மல்லிகை பூ வரத்து தற்போது கிடையாது. மழை மற்றும் பனிப்பொழிவால் மல்லிகை பூ விளைச்சல் இல்லை. குறிப்பிட்ட அளவு தான் விளைச்சல் காணப்படுகிறது. இதனால் விலை அதிகம் உயர்ந்துள்ளது. மற்ற பூக்களின் விலை குறைவு தான். சம்பங்கி, செண்டி பூ தலா ரூ.50-க்கு விற்றது. பன்னீர் ரோஸ் பூ கிலோ ரூ.150-க்கு விற்பனையானது'' என்றனர். சில்லறை வியாபாரிகளிடம் பூக்கள், மாலைகள் விலை சற்று உயர்ந்திருந்தது.
பூஜை பொருட்கள்
தீப திருவிழாவையொட்டி அகல் விளக்குகள் விற்பனை நேற்றும் மும்முரமாக நடைபெற்றது. வண்ண நிற மெழுகுவர்த்தி, சிட்டி விளக்குகள் உள்ளிட்டவையும் அதிகம் விற்பனையாகின. இதேபோல தேங்காய், பழம் உள்பட பூஜைக்கான பொருட்கள், விற்பனை படுஜோராக நடந்தது.