மல்லித்தழை விலை மீண்டும் உயர்வு
மல்லித்தழை விலை மீண்டும் உயர்வு
திருப்பூர்,
திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தென்னம்பாளையம் மார்க்கெட், காட்டன் மார்க்கெட் வளாகத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டிற்கு பல்லடம், அவினாசிபாளையம், ஆண்டிபாளையம் மற்றும் திருப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து மல்லித்தழை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. திருப்பூரில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் மல்லித்தழைகள் அதிக அளவில் சேதமடைவதால் இதன் வரத்து ஏற்ற இறக்கமாக உள்ளது. இதன்காரணமாக சமீப நாட்களாக விலை கூடுவதும், குறைவதுமாக உள்ளது. கடந்த வாரம் ஒரு கட்டு மல்லித்தழை ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த சில தினங்களாக விலை குறைந்து ஒரு கட்டு ரூ.10 முதல் ரூ.20 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வரத்து பெருமளவு குறைந்ததால் மல்லித்தழையின் விலை மீண்டும் அதிகரித்து ஒரு கட்டு ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இது குறித்து விவசாயிகள் கூறும்போது, ஓசூரில் இருந்து கொண்டு வரப்படும் மல்லித்தழை ஒரு கட்டு ரூ.20 முதல் ரூ.25 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இவை விரைவில் வாடும் தன்மையுடையது. திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மல்லித்தழை வரத்து குறைவாக இருப்பதால் ரூ.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.