ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள்-டி.டி.வி. தினகரன் பேட்டி


ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள்-டி.டி.வி. தினகரன் பேட்டி
x

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

திருச்சி

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் ஓரணியில் இணைவார்கள் என்று திருச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள்-வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் திருச்சி தாஜ் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை நிலைய செயலாளரும், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான எம்.ராஜசேகரன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் கவுன்சிலர் ப.செந்தில்நாதன் வரவேற்று பேசினார்.

அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் ஆர்.ரெங்கசாமி, அமைப்பு செயலாளர் ஆர்.சாருபாலா தொண்டைமான், மாநில அம்மா தொழிற்சங்க இணைச்செயலாளரும், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான கே.வி.டி.கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஒற்றுமையாக செயல்படுங்கள்

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் சிறப்புரை ஆற்றி பேசும் போது, நம் கட்சியில் இருந்து மாற்றுக்கட்சிக்கு சென்றால் ஒதுக்கி விடுவார்கள். நீங்கள் எல்லாம் தானாக சேர்ந்த கூட்டம். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் நாம் இல்லாமல் யாரும் வெற்றி பெற முடியாது. எனவே ஒற்றுமையாக செயல்படுங்கள் என்றார்.

முன்னதாக டி.டி.வி. தினகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. கூட்டணியில் அ.தி.மு.க. இருக்கும் பட்சத்தில் அந்த கூட்டணியில் அ.ம.மு.க. இணையுமா? என்பதை தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் மக்கள் கொதிப்படைந்து எதிர்ப்பை காட்டுவதற்காக தான் 2019-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்தார்கள். ஆனால் 2½ ஆண்டு தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியையும் தாண்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக மக்களின் கோபத்துக்கு ஆளாகி இருக்கிறார்.

ஆகவே நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், 2026 சட்டமன்ற தேர்தல் என்பது தி.மு.க.வை எதிர்த்து மக்கள் வாக்களிக்கிற தேர்தல். அதில் உறுதியாக தமிழக மக்கள் தி.மு.க.வுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் மாற்றாக அ.ம.மு.க.வை ஏற்று கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் நாங்கள் பயணிக்கிறோம்.

ஓரணியில் இணைவார்கள்

மேகதாது அணை கட்டுவதை எதிர்த்து முதன்முதலில் அ.ம.மு.க. சார்பில் திருச்சியில் தான் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சிக்கு வருகிறதோ? அப்போது கர்நாடகாவுக்கு தைரியம் வந்துவிடும். தமிழக மக்களை வஞ்சிக்க பார்ப்பார்கள். ஆனால் மத்திய அரசு உறுதியாக இருந்து தமிழக மக்களின் நியாயமான உரிமையை பெற்று தர வேண்டும். எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது, ஈட்டிய செல்வத்தை கொண்டு மக்களை எல்லாம் அள்ளி செல்லலாம் என்ற நோக்கத்தோடு மாநாடு நடத்துகிறார்கள். எப்படியும் 250 கோடிக்கு மேல் மக்களுக்கு பணத்தை வாரி வழங்குகிற நல்ல காரியத்தை செய்ய இருக்கிறார்கள். ஆனால் மக்கள் செல்வார்களா? என்று தெரியாது. ஒவ்வொரு நபருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி மாநாட்டுக்கு கூப்பிடுவதாக கூறுகிறார்கள். என்னதான் பணத்தை கொடுத்து கூட்டம் கூட்டினாலும், அது தானாக கூடும் வரை வெற்றி கிடைக்காது.

எடப்பாடி பழனிசாமி ஜெயலலிதாவின் கட்சியை கபளீகரம் செய்துள்ளார். அதை ஜனநாயக முறைப்படி மீட்டெடுக்க உருவாக்கப்பட்ட இயக்கம் தான் அ.ம.மு.க. ஆகவே நாங்கள் தொடர்ந்து போராடி ஜெயலலிதாவின் இயக்கத்தை வருங்காலத்தில் மீட்டெடுப்போம். உண்மையான ஜெயலலிதாவின் தொண்டர்கள் எல்லாம் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு 2026 தேர்தலில் ஓரணியில் இணைவார்கள். அப்போது உங்களுக்கு உண்மையான தொண்டர்கள் யார் பக்கம் இருக்கிறார்கள் என்று தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story