பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை-பணம் அபேஸ்
மயக்க மருந்து கலந்த சத்து மாவு கொடுத்து பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை-பணத்தை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
மயக்க மருந்து கலந்த சத்து மாவு கொடுத்து பஸ்சில் பயணித்த பெண்ணிடம் நகை-பணத்தை அபேஸ் செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த திருட்டு குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
அரசு பஸ்சில் வந்தார்
கோவை சுந்தராபுரம் ஸ்ரீனிவாச நகரில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்தவர் ஜனகராஜ், பெயிண்டர். இவருடைய மனைவி சங்கரேஸ்வரி (42). சம்பவத்தன்று இவர் மதுரையில் உள்ள உறவினர் வீட்டு, துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு கோவை திரும்பினார்.
அப்போது பஸ்சில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுரையில் இருந்து பழனி வந்துவிட்டு, பின்னர் பழனியில் இருந்து வேறு ஒரு அரசு பஸ்சில் கோவை வந்து கொண்டு இருந்தார். இவர் ஏற்கனவே பழனி வரை வந்த பஸ்சில் அவருடன் பயணித்த பெண் ஒருவர், இந்த பஸ்சிலும், அவர் அருகே இருக்கையில் வந்து அமர்ந்தார்.
சத்து மாவு கொடுத்தார்
அப்போது அந்த பெண், சங்கரேஸ்வரியிடம் பேச்சுக்கொடுத்தார். ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. மீண்டும் பேச ஆரம்பித்த அந்த பெண், சாப்பிட்டீர்களா? என்று கேட்டார். அதற்கு அவர் இன்னும் சாப்பிடவில்லை, வீட்டிற்கு சென்றுதான் சாப்பிட வேண்டும் என்று கூறினார்.
வீட்டுக்கு செல்ல இரவு ஆகிவிடும், அதுவரை சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆவது? என்று கூறிய அந்த பெண், தன்னிடம் இருந்த மாவை அவருக்கு சாப்பிட கொடுத்தார். இது சத்து நிறைந்த மாவு, இதை சாப்பிட்டால், பசிக்காது என்று கூறி உள்ளார்.
நகை-பணம் அபேஸ்
முதலில் அந்த மாவை வாங்க மறுத்த சங்கரேஸ்வரி, வலுக்கட்டாயமாக அந்த பெண் கொடுத்ததால் வேறு வழியில்லாமல் வாங்கி, அதை சாப்பிட்டார். பின்னர் சிறிது நேரத்தில் மயங்கினார். பின்னர் அந்த பஸ் உக்கடம் வந்ததும், கண்டக்டர் சங்கரேஸ்வரியை எழுப்பி விட்டார்.
அப்போது அவர் தான் அணிந்து இருந்த 3½ பவுன் நகை மற்றும் பர்சில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் ஆகியவை காணாமல் போய் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அப்போதுதான் அவருக்கு தனது அருகே இருந்த பெண் மயக்க மருந்து கலந்த சத்து மாவை கொடுத்துவிட்டு நகை, பணத்தை அபேஸ் செய்துவிட்டு சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு பஸ்சில் பயணித்த பெண்ணிடம் மயக்க மருந்து கலந்த மாவை கொடுத்து நகை-பணத்தை அபேஸ் செய்துவிட்டு சென்ற சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.