திருவெண்ணெய்நல்லூர் அருகேஅங்காளம்மன் கோவிலில் நகை-பணம் கொள்ளைமர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவெண்ணெய்நல்லூர் அருகே அங்காளம்மன் கோவிலில் நகை-பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் அருகே மேல்தணியாலம்பட்டு கிராமத்தில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்தவுடன் பூசாரியான ராஜீவ்காந்தி என்பவர் கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் கோவிலின் முன்பக்க கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அவர்கள், அம்மன் கழுத்தில் கிடந்த ஒரு பவுன் நகை மற்றும் எதிரே இருந்த உண்டியலை உடைத்து, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த பணத்தையும் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். நகை, பணம் கொள்ளை போனதை அறிந்த பூசாரி இதுபற்றி திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தடயங்களை சேகரித்ததுடன், நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அக்கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.