தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு


தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

சேத்தியாத்தோப்பு அருகே தீப்பாய்ந்த அம்மன் கோவிலில் நகை, பணத்தை திருடிச்சென்ற மர்மநபா்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்கு பாளையம் கிராமத்தில் தீப்பாய்ந்த அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்ததும், பூசாரி முருகேசன்(வயது 54), கோவிலின் உள் மரக்கதவை பூட்டாமல் வெளி இரும்பு கதவை மட்டும் பூட்டி விட்டு வீட்டுக்கு சென்று விட்டார்.

பின்னர் நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது, கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியலை காணவில்லை. மேலும் அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 1 பவுன் நகையையும் காணவில்லை. அதனை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் பூசாரி மற்றும் பக்தர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

நகை-பணம் திருட்டு

அதன்பேரில் சோழத்தரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. அது மோப்பம்பிடித்தபடி சிறிது தூரம் வரை ஓடிச்சென்று சின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. அப்போது கோவில் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பூங்குளத்தில் கோவில் உண்டியல் இருந்தது தெரியவந்தது. ஆனால் அதில் இருந்த காணிக்கை பணத்தை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர், கோவில் சுவரில் ஏறிக்குதித்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் அம்மன் கழுத்தில் கிடந்த நகை மற்றும் உண்டியலை திருடி, பூங்குளத்தில் வைத்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை திருடிச்சென்றிருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவில்லை.

தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story