திண்டிவனத்தில் துணிகரம்:தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளைகைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு


திண்டிவனத்தில் துணிகரம்:தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணம் கொள்ளைகைவரிசை காட்டிய மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 5 May 2023 12:15 AM IST (Updated: 5 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் ரூ.20 லட்சம் நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

விழுப்புரம்


மயிலம்,


இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மகாத்மாகாந்தி நகரில் வசிப்பவர் ராம்குமார்(வயது 40). இவர் திண்டிவனம் நகராட்சியில் 24-வது வார்டு தி.மு.க. கவுன்சிலராக உள்ளார். ரியல்எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார். இவரது மனைவி கஜலெட்சுமி.

மேலும், ராம்குமார் தென்பசியாரில் நாகஅங்காளம்மன் கோவில் ஒன்றையும் கட்டி நிர்வகித்து வருகிறார். அந்த கோவிலுக்கு அருகே இவருக்கு சொந்தமாக ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டுக்கு அவ்வப்போது ராம்குமார் சென்று வருவது வழக்கம்.

உடைந்து கிடந்த வீட்டு கதவு

நேற்று முன்தினம் மாலையில், ராம்குமார் திண்டிவனத்தில் இருந்து தென்பசியாரில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் நேற்று காலையில் தென்பசியாரில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதாக கஜலெட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் அங்கு சென்று பார்த்தார்.

அப்போது, முன்பக்கம் இருந்த இரும்பு கதவு பூட்டு பூட்டிய நிலையில், உள்பக்கம் இருந்த மரக்கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று அவர் பார்த்த போது அதிர்ச்சிக்கு உள்ளானார்.

தங்கம், வைர நகைகள் கொள்ளை

ஏனெனில் அங்கிருந்த 3 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அதோடு பீரோக்களில் இருந்த 26 பவுன் நகை, 1½ கேரட் வைரம், 1 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.6 லட்சம் பணம் மற்றும்ரூ.1 லட்சம் மதிப்பிலான டி.வி. மற்றும் ராம்குமார் ரியல்எஸ்டேட் தொழில் தொடர்பாக வைத்திருந்த பத்திரங்கள் உள்ளிட்டவை கொள்ளை போயிருந்தன. கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

தடயங்கள் சேகரிப்பு

இதுகுறித்து கெஜலட்சுமி உடனடியாக மயிலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்போில் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

அப்போது, வீட்டின் முன்பக்க இரும்பு கதவு பூட்டி இருந்ததால், கொள்ளையர்கள் வீட்டின் மாடியின் வழியாக உள்ளே வந்து கதவை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்கள் நேரில் வந்து, அங்கிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் விழுப்புரத்தில் இருந்து மோப்பநாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்து, சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படாமல் இருந்ததால், கொள்ளையர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பகுதியில் பிற இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, அதில் சந்தேகப்படும்படியாக நபர்கள் யாரேனும் நடமாட்டம் உள்ளதா? என்று போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

இதுகுறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இ்ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story