மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு


மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 20 Sep 2023 7:00 PM GMT (Updated: 20 Sep 2023 7:00 PM GMT)

கோவை சுந்தராபுரத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் 4 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்

கோயம்புத்தூர்

கோவை

கோவை சுந்தராபுரத்தில் மொபட்டில் சென்ற 2 பெண்களிடம் 4 பவுன் நகையை பறித்து தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்..

மொபட்டில் சென்றனர்

கோவையில் நகைபறிப்பு குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் முக்கிய ஆசாமிகளை பிடிக்க தனிப்படையினர் மராட்டியமாநிலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தீவிர தேடுதல்வேட்டை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் மேலும் ஒரு நகைபறிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து போலீசில் கூறியதாவது:-

கோவை சுந்தராபுரம் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள வி.எஸ். என். கார்டன் பகுதியை சேர்ந்த பிரதீப் என்பவரது மனைவி வனிதா (வயது31). இவருடைய மாமியார் கடந்த 3 நாட்களாக தோள்பட்டை வலியால் அவதிப்பட்டு வந்தார். எனவே வனிதா மாமியாரை அழைத்துக் கொண்டு, மொபட்டில் சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிசியோதெரபி சிகிச்சைக்காக சென்றார். பின்னர் இரவு 8 மணி அளவில் 2 பேரும் மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

கீழே விழுந்து 2 பேர்காயம்

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள பாலம் அருகே வந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், வனிதாவின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலியை பறித்தனர். அவர்களை வனிதா தடுக்க முயன்ற போது, நிலைதடுமாறி 2 பேரும் மொபட்டில் இருந்து கீழே விழுந்தனர். இதில் வனிதாவிற்கு காலில் காயம் ஏற்பட்டது. மாமியாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 4 பவுன் தங்கச்சங்கலியுடன் நகைபறிப்பு ஆசாமிகள் தப்பிச்சென்றுவிட்டனர். இந்த நிலையில் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நகைபறிப்பு சம்பவம் குறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைபறிப்பு ஆசாமிகளை தேடி வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Next Story