ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நகை திருட்டு


ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 24 March 2023 12:15 AM IST (Updated: 24 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடி சென்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளில் திருட முயன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சியில் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் வீட்டில் மர்ம நபர்கள் நகையை திருடி சென்றனர். மேலும் அடுத்தடுத்த வீடுகளில் திருட முயன்றதால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

நகை திருட்டு

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் திருவள்ளுவர் வீதியை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 82). ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் ஆவார். இவரது மனைவி பெரியநாயகி (78). இவர்கள் 2 பேரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 2 பேரும் நேற்று அதிகாலை எழுந்து பார்த்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோவில் இருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் வீட்டில் இருவரும் ஒரு அறையில் தூங்கி கொண்டிருக்கும் போது, மற்றொரு அறையில் இருந்த 7 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

பொதுமக்கள் பீதி

இதை தொடர்ந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிந்திருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் இருந்த 2 வீடுகளிலும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் எந்த பொருட்களும் திருடுபோகவில்லை. மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆட்கள் இல்லாத வீடுகளை குறி வைத்து மர்ம நபர்கள் கைவரிசையை காட்டுவது வழக்கம். ஆனால் பொள்ளாச்சியில் ஆட்கள் வீட்டிற்குள் இருப்பது தெரிந்தும் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் உள்ளே சென்று நகைகளை திருடி செல்வதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

1 More update

Next Story