சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம் நகைக்கடைக்குள் புகுந்து 5 பவுன் நகையை பறித்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் தப்பியவருக்கு போலீஸ் வலைவீச்சு


சிதம்பரத்தில் பட்டப்பகலில் துணிகரம்  நகைக்கடைக்குள் புகுந்து 5 பவுன் நகையை பறித்த வாலிபர்  மோட்டார் சைக்கிளில் தப்பியவருக்கு போலீஸ் வலைவீச்சு
x

சிதம்பரத்தில் பட்டப்பகலில் நகைக்கடைக்குள் புகுந்து 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடலூர்


சிதம்பரம்,

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகை வாங்க வந்த வாலிபர்

சிதம்பரம் கோட்டையன் தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 43). இவர் சிதம்பரம் காசுக்கடை தெருவில் நகை கடை நடத்தி வருகிறார். நேற்று காலை 11.30 மணிக்கு இவரது நகை கடைக்கு 35 வயதுடைய வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளை ஆப் செய்யாமல், கடையின் முன் நிறுத்திவிட்டு, உள்ளே சென்ற அந்த வாலிபர் அங்கு பணியில் இருந்த 2 பெண்களிடம், தாலி செயினை காண்பிக்குமாறு கூறினார்.

நகைகளுடன் தப்பினார்

அதில் ஒரு பெண் மட்டும் நகையை காண்பித்து கொண்டு இருந்த நிலையில், மற்றொரு பெண் கடையில் இருந்து வெளியே சென்றார். கடையில் ஒருவர் மட்டுமே இருப்பதை அறிந்த அந்த வாலிபர், பெண்ணின் கையில் இருந்த 3 மற்றும் 2 பவுன் நகையை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றார்.

அப்போது அந்த பகுதியில் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணின் மீது மோதிவிட்டு, நிற்காமல் தப்பி சென்றுவிட்டார். அக்கம்பக்கதினர் துரத்தி சென்றும், அந்த நபரை பிடிக்க முடியவில்லை.

கண்காணிப்பு கேமராJewelry flush

இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் தனிப்படை போலீசார், நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நகைக் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா பழுது காரணமாக இயங்கவில்லை. இதனால் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

அதே நேரத்தில் வாலிபர் தப்பி சென்ற பகுதியில் ஏனைய கடையில் உள்ள கண்காணிப்பு கேமாரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு, வாலிபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story