நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு


நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
x

ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு

ஈரோட்டில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

நகை பறிப்பு

ஈரோடு காசிபாளையம் முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியம் 3-வது பகுதியை சேர்ந்தவர் பத்மா (வயது 50). இவர் நேற்று முன்தினம் மதியம் அந்த பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தார்கள். அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்ததால், மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி பத்மாவை நோக்கி சென்றார். அப்போது அவர் பத்மா அணிந்து இருந்த 2¾ பவுன் நகையை பறித்துவிட்டு வேகமாக மோட்டார் சைக்கிளில் சென்று ஏறினார். இதையடுத்து அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்றார்கள்.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்த சம்பவத்தால் பத்மா அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் ஈரோடு தாலுகா போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் விசாரணை

நகை பறிப்பு சம்பவம் நடந்த பகுதிக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் மர்மநபர்களின் உருவம் பதிவாகி உள்ளதா? என்றும் போலீசார் பார்வையிட்டு வருகிறார்கள்.

கடந்த 26-ந் தேதி ஈரோடு பெரியார்நகரில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியையிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 4 பவுன் நகையை பறித்து சென்றார்கள். எனவே இந்த 2 சம்பவங்களிலும் ஒரே நபர்கள் ஈடுபட்டு உள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டப்பகலில் பெண்ணிடம் மர்மநபர்கள் நகை பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரோட்டில் கடந்த சில நாட்களாக வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story