ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4 பேர் வீடுகளில் நகை-பணம் திருட்டு
மணிகண்டம், மணப்பாறை, துவரங்குறிச்சியில் ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4பேர் வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மணிகண்டம், மணப்பாறை, துவரங்குறிச்சியில் ரெயில்வே ஊழியர், பேராசிரியர் உள்பட 4பேர் வீடுகளில் நகை-பணம் திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ரெயில்வே ஊழியர்
மணிகண்டம் அருகே உள்ள நாகமங்கலம் நேருஜி நகரை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 35). இவர் திருச்சி ரெயில்வேயில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். நெல்லையை சேர்ந்த இவர் இங்கு சொந்தமாக வீடு கட்டியுள்ளார். இந்நிலையில் மனைவியின் கண்சிகிச்சைக்காக கடந்த 6-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் நெல்லை சென்று இருந்தார். இந்த நிலையில் சிகிச்சை முடிந்ததும் நேற்று காலை 6 மணி அளவில் நாகமங்கலம் நேருஜி நகரில் உள்ள வீட்டிற்கு வந்துள்ளனர்.
அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராம்குமார் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 11 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருட்டு போய் இருந்தன. இது குறித்து ராம்குமார் மணிகண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மஆசாமிகள் இந்த துணிகர திருட்டில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
மணப்பாறை
இதேபோல் மணப்பாறையை அடுத்த பெஸ்டோ நகரை சேர்ந்தவர் பார்த்திபன் (36). இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ந் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான கவரப்பட்டிக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 14 பவுன் நகை, ரூ.25 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதே போல் காட்டுப்பட்டி காமராஜர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (32). இவரது வீட்டின் முன் பக்க கேட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுவிட்டனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தனித்தனியாக வந்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
14 பவுன் நகைகள் திருட்டு
வளநாட்டை அடுத்த சொரியம்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல். திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் குடும்பத்தினர் வேலை விஷயமாக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டனர். இதைநோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 14 பவுன் நகைகளை திருடி சென்றுவிட்டனர். இது குறித்த புகாரின் பேரில் வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.