வேலப்பன்சாவடியில் போலீஸ் போல் நடித்து கல்லூரி மாணவரிடம் 6 பவுன் நகை பறிப்பு
வேலப்பன்சாவடியில் போலீஸ் போல் நடித்து கல்லூரி மாணவரிடம் 6 பவுன் நகை பறித்த நபரை நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி அடுத்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் பல் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் 3-ம் ஆண்டு மாணவர் கிரண் (வயது 21). இவர், தன்னுடன் படிக்கும் கணேஷ் (21), தேவி (21) ஆகியோருடன் நசரத்பேட்டை அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த மர்மநபர், தன்னை போலீஸ்காரர் என்று கூறியதுடன், "இந்த நேரத்தில் பெண்ணுடன் தனியாக அமர்ந்து என்ன பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?. சப்-இன்ஸ்பெக்டர் உங்களை அழைத்து வர சொன்னார்" என்று கூறி கிரண் என்ற மாணவரை மட்டும் தன்னுடன் மோட்டார்சைக்கிளில் அழைத்துச்சென்றார்.
முன்னதாக கிரண் அணிந்து இருந்த 6 பவுன் சங்கிலியை காரில் கழற்றி வைத்து விட்டு வருமாறு கூறினார். அதன்படி அவரும் நகையை கழற்றி காரில் வைத்தார். பின்னர் அந்த நபருடன் மோட்டார்சைக்கிளில் ஏறிச்சென்றார். சிறிது தூரம் சென்றதும் கிரனை கீழே இறக்கிவிட்ட அந்த நபர் மீண்டும் திரும்பி வந்து காரில் கிரண் கழற்றி வைத்த 6 பவுன் நகையை பறித்து சென்றுவிட்டார். பின்னர்தான் அந்த நபர் போலீஸ் போல் நடித்து நகையை பறித்தது அவர்களுக்கு தெரியவந்தது. இதுபற்றி நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.