நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை
நகை பட்டறை உரிமையாளர் தற்கொலை
கோவை
கோவை ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் ரமேசன் (வயது 54). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வந்தார். இவரிடம் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 3 கிலோ தங்கத்தை வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதற்கான பணத்தை சில நாட்களில் திருப்பி தந்து விடுவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் சொன்னபடி அந்த பணத்தை திருப்பி தராமல் வெகு நாட்களாக காலம் தாழ்த்தி வந்தார்.
இதனால் அவர் கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இதற்கிடையே அவர் உடல் நலம் சரியில்லாமலும் அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது மனைவி கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். வீட்டில் ரமேசன் மட்டும் தனியாக இருந்தார்.
இந்நிலையில், வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் கடந்த 28-ந் தேதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.