தமிழகத்தில் உள்ள வேலைகளை வடமாநிலத்தவர்கள் பறித்து வருகின்றனர் - சீமான் குற்றச்சாட்டு
தமிழர்கள் செய்து வந்த விவசாயம் உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் வடமாநிலத்தைச் சேர்தவர்கள் பறித்துக்கொண்டு வருகின்றனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
தி.மு.க, அ.தி.மு.க, அ.ம.மு.க மற்றும் பாஜ.க ஆகிய கட்சியில் இருந்து ஏராளமானோர் விலகி நாம் தமிழர் கட்சியில் இணையும் விழா காரைக்குடியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அப்போது கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டையை சீமான் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது,
தமிழகத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே நிகழ்ச்சியில் தமிழகத்தில் முதல் 3அரசியல் தலைவர்கள் பட்டியலில் நான் 3-வது இடத்தை பெற்றது உண்மையிலேயே வியப்பாக உள்ளது. அந்த தொலைக்காட்சி நிறுவனம் பொதுவாக எனது கட்சி செயல்பாடுகள் குறித்த செய்தியை வெளியிடுவதில்லை.
ஆனால் எனக்கும் 3-வது இடம் கொடுத்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 3-வது இடத்தில் உள்ள நான் முதல் இடத்தை பெறுவது என்பது அதிக நாட்கள் அமையாது.
அந்த நாட்கள் அமைவது நீங்கள் போடும் ஓட்டுக்களில் மட்டுமே உள்ளது. இன்று தமிழகத்தில் தி.மு.க, அ.தி.மு.க ஆகிய 2-மாபெரும் கட்சிகள் தேர்தல் நேரத்தில் 5 ஆயிரம் கோடி, 10 ஆயிரம் கோடி பணத்தை வைத்து அதை மக்களிடம் கொடுத்து ஓட்டு பெற்று ஆட்சியை பிடிக்கிறது.
ஆனான் நாம் தமிழர் கட்சி அப்படி அல்ல. மக்களிடம் நேர்மையை விளக்கி ஓட்டுக்களை கடந்த தேர்தலில் பெற்றுள்ளோம். கடந்த தேர்தலில் 30 லட்சம் ஓட்டுக்களை பெற்றுள்ளோம். இதே ஓட்டுக்கள் இன்னும் 3 மடங்கு அதிகரித்தால் நாம் தமிழர் கட்சி தான் அடுத்த ஆட்சியை அமைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இன்று தமிழகத்தில் படிப்படியாக வெளிமாநில தொழிலாளர்கள் உள்ளே வந்து நமது வேலைகளை எல்லாம் பறித்துக்கொண்டு தமிழர்களை சேம்பேறியாக்கி விடுகின்றனர். இன்று தமிழகத்தில் கூலிவேலை முதல் கொத்தனார் வேலை, விவசாய வேலை வரை வெளிமாநிலத்தவர்கள் செய்து வருகின்றனர்.
இப்படியே நமது வேலைகளை எல்லாம் அவர்கள் செய்தால் வருங்காலத்தில் தமிழகத்திலேயே இடம் வாங்கி வீடு கட்டிக்கொண்டு தமிழர்களை கொத்தடிமையாக்கும் வேலையை அவர்கள் செய்யும் காலம் விரைவில் வரும். அவ்வாறு தான் ஈழத்திலும் நடந்தது. என்பதை தமிழக மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
சமீபத்தில் கூட ராமேசுவரத்தில் வெளிமாநில இளைஞர்கள் நமது பெண்ணை கற்பழித்து கொலை செய்யும் காரியத்தில் ஈடுபட்டதை நாம் மறக்க கூடாது. எனவே தமிழகத்தில் உள்ள வேலைகளை தமிழர்களே செய்ய வேண்டும். இலங்கை அரசிற்கு கடன் உதவி தொகை வழங்குகிறோம். இலங்கை அரசை கடனில் இருந்து காப்பாற்றி வருகிறோம் என இந்திய அரசு கூறி வருகிறது.
இலங்கையில் உள்ள 2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த நிலையில் தற்போது எதற்காக அங்கு கடன் வழங்குகிறார்கள் என்பது தெரியவில்லை. வடமாநிலத்தை பொறுத்தவரை தமிழர்களின் வீரத்தை மறைக்க வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் மத்திய அரசு செயல்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.