கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு

கூடலூரில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறியது.
கூடலூர், கம்பம், உத்தமபாளையம், கோம்பை ஆகிய பகுதிகளுக்கு லோயர்கேம்ப் கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக லோயர்கேம்ப் பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கூடலூர் நகரப்பகுதிக்கு மட்டும் தனியாக புதிய நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன்படி நீரேற்று நிலையத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக குழாய்கள் மூலம் 16-வது வார்டில் உள்ள தரைமட்ட தொட்டிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பின்னர் அங்கிருந்து அனைத்து வார்டுகளுக்கும் தனித்தனியாக பிரித்து குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று 16-வது வார்டு தரைமட்ட தண்ணீர்தொட்டிக்கு வரும் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. எனவே தண்ணீர் வீணாக வெளியேறுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.