டெல்லியில் போராட்டம் நடத்தியபோது போலீசார் தாக்கியதில் 2 கைகளில் பாதிப்பு; ஜோதிமணி எம்.பி. வேதனை


டெல்லியில் போராட்டம் நடத்தியபோது போலீசார் தாக்கியதில் 2 கைகளில் பாதிப்பு; ஜோதிமணி எம்.பி. வேதனை
x

டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, போலீசார் தாக்கியதில் 2 கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது என்று ஜோதிமணி எம்.பி. வேதனையுடன் தெரிவித்தார்.

திண்டுக்கல்
டெல்லியில் போராட்டம் நடத்தியபோது, போலீசார் தாக்கியதில் 2 கைகளிலும் பாதிப்பு ஏற்பட்டது என்று ஜோதிமணி எம்.பி. வேதனையுடன் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள்

மத்திய அரசு சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா, வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியில் நடந்தது. விழாவுக்கு எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

ஒன்றியக்குழு தலைவர்கள் சவுடீஸ்வரிகோவிந்தன் (வேடசந்தூர்), சீனிவாசன் (குஜிலியம்பாறை), வேடசந்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கவிதாபார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் ஜோதிமணி எம்.பி. கலந்துகொண்டு 357 மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், காதொலிகருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அவர் பேசும்போது கூறியதாவது:-

அரிசி, பால், தயிர், கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதித்ததை கண்டித்து நாடாளுமன்றத்தில் பிளாக் கார்டு படித்து பேசியதற்கு 2 வாரம் இடைநீக்கம் செய்யப்பட்டேன்.

2 கைகள் பாதிப்பு

என்னைப்போலவே தி.மு.க., காங்கிரஸ் எம்.பி.க்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதற்காக டெல்லியில் நடந்த போராட்டத்தின்போது போலீசார் என்னை தாக்கினர். இதில் என்னுடைய 2 கைகளும் பாதிக்கப்பட்டது. இதற்கு இன்று (நேற்று) கூட மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தேன்.

மன்னிப்பு கேட்டால் இடைநீக்கம் ரத்து செய்யப்படும் என்கிறார்கள். நாங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்களை பாதிக்கிற ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். மக்களின் கோரிக்கையை பேசினோம் என்பதால், நாங்கள் மன்னிப்பு கேட்க மாட்டோம்.

அவசர சிகிச்சைக்கு ஜி.எஸ்.டி.

மின் மயானத்துக்கும், அரிசிக்கும், அவசர சிகிச்சைக்கும் ஜி.எஸ்.டி. வரி போட்ட அரசை எங்கேயாவது பார்த்து இருக்கிறோமா?. நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ஒரே முறை தான் வழங்கப்பட்டுள்ளது. எனக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கல்விக்கு 55 சதவீதமும், அரசு மருத்துவமனைக்கு 30 சதவீதமும், மீதமுள்ள தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக காங்கிரஸ் கட்சி பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன் வரவேற்றார். தி.மு.க. இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர்கள் கோபால்சாமி, தர்மர், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ராஜம்மாள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story