சொந்த ஊருக்கு பயணம்: கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதல்
தீபாவளி பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு பயணம் சென்றவர்களால் கரூர் பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பஸ் நிலையம்
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளியை வெகுவிமரிசையாக கொண்டாட பொதுமக்கள் தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கரூரில் டெக்ஸ்டைல் ஜவுளி, கொசுவலை, பஸ்பாடி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் பலர் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் தீபாவளி பண்டிகையை தங்களது சொந்த ஊருக்கு சென்று கொண்டாடுவது வழக்கம்.
இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக வெளியூரை சேர்ந்தவர்கள் பலர் நேற்றே தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் கரூர் பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. மேலும் பஸ்களில் பயணிகள் முண்டியடித்து ஏறியதை காண முடிந்தது.
சிறப்பு பஸ்கள்
தீபாவளி பண்டிகையையொட்டி கரூரில் இருந்து சென்னை, திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட ஊர்களுக்கு நேற்று 150 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) 150 சிறப்பு பஸ்களும், நாளை (திங்கட்கிழமை) 80 சிறப்பு பஸ்களும், 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 150 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன.
சோதனை
இதேபோல் வெளியூரை சேர்ந்தவர்கள் ரெயில் மூலமும் வெளியூர்களுக்கு பயணம் செய்தனர். இதனையொட்டி கரூர் ரெயில் நிலையத்தில் இருந்து பயணிகள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு ரெயிலில் பயணம் செய்தனர். ஆனாலும் ரெயில் நிலையங்களில் கூட்டம் குறைவாகவே இருந்தது. இந்நிலையில் கரூர் ரெயில்வே நிலையத்தில் பட்டாசு, வெடி பொருட்கள், மண்ணெண்ணெய் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை ரெயிலில் எடுத்து செல்லக்கூடாது என்றும், மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ரெயில்வே போலீசார் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
மேலும் ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பட்டாசு போன்ற பொருட்களை எடுத்து செல்கிறார்களா என்றும், பயணிகளின் உடைமைகளையும் ரெயில்வே போலீசார் சோதனை செய்தனர்.