கோகுல்ராஜ் கொலை வழக்கு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு


கோகுல்ராஜ் கொலை வழக்கு:திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

எலச்சிபாளையம்:

என்ஜினீயர் கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கு

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த என்ஜினீயர் கோகுல்ராஜ் கடந்த 2015-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தீரன் சின்னமலை பேரவை தலைவர் யுவராஜ் உள்ளிட்ட 10 பேர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதேபோல் இந்த வழக்கில் சிலர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கோகுல்ராஜின் பெற்றோரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது.

கண்காணிப்பு கேமராக்கள்

இந்த வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் ஆஜராகி, நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள 2 கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை மட்டுமே போலீசார் ஆய்வு செய்துள்ளனர். மேலும் கோகுல்ராஜ் மரணம் தொடர்பான வீடியோ பதிவுகளிலும் முரண்பாடுகள் உள்ளது'' என்று வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை வருகிற 27-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு நேரில் சென்று அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ய உள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நீதிபதிகள் ஆய்வு

அதன்படி திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு நேற்று காலை 11.40 மணிக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் வந்தனர். இதையடுத்து அவர்கள் கோவிலின் மேற்குபுற வாசலில் கொடிமரம் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் கோகுல்ராஜ், சுவாதி கோவிலுக்குள் சென்ற காட்சிகள், யுவராஜ் தரப்பினர் வெளியே சென்ற காட்சிகள் உள்ளிட்டவைகளை நீதிபதிகள் ஆய்வு செய்ததாக தெரிகிறது. மேலும் ராஜகோபுரம் உள்ளிட்ட 4 புறவாசல்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கேமரா பொருத்தப்படாத பகுதியிலும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர்.

தொட்டிபாளையம்

ஆய்வின்போது நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி வடிவேல், திருச்செங்கோடு குற்றவியல் நீதிபதி சுரேஷ்பாபு, சார்பு கோர்ட்டு நீதிபதி சுரேஷ் குமார், திருச்செங்கோடு உதவி கலெக்டர் கவுசல்யா, கோகுல்ராஜ் தரப்பு வக்கீல் மோகன், வக்கீல் லஜபதி ராஜா, கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர்.

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆய்வை நிறைவு செய்து விட்டு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பள்ளிபாளையம் அருகே தொட்டிபாளையத்தில் உள்ள ரெயில் தண்டவாள பகுதிக்கு சென்றனர். பின்னர் தண்டவாளத்தில் கோகுல்ராஜ் உடல் கிடந்த இடத்ைத பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதையடுத்து நீதிபதிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.


Related Tags :
Next Story