கடலூர் அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4-ந் தேதிக்கு தீர்ப்பு தள்ளிவைப்பு நீதிபதி உத்தரவு
கடலூர் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 4-ந்தேதிக்கு தீர்ப்பை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
கடலூர் துறைமுகத்தில் இருந்து நாள்தோறும் தேவனாம்பட்டினம், தாழங்குடா, அக்கரைக்கோரி, சோனாங்குப்பம், சொத்திக்குப்பம், சிங்காரத்தோப்பு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர். இவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட விசை படகுகளிலும், ஆயிரக்கணக்கான பைபர் படகுகளில் ஆழ்கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள்.
இதற்கிடையில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிப்பது தொடர்பாக கடலூர் தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும், கடலூர் துறைமுகம் சோனாங்குப்பம் பகுதி மீனவர்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக கடந்த 15.5..2018 அன்று இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் கத்தி, அரிவாள், சுளுக்கி போன்ற பயங்கர ஆயதங்களுடன் தாக்கிக்கொண்டனர்.
கொலை
இந்த மோதலில் சமாதானத்தில் ஈடுபட முயன்ற சோனாங்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரும், மீனவருமான பஞ்சநாதன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 21 பேரை கைது செய்தனர்.
இந்த வழக்கு கடலூர் முதலாவது மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கு நடக்கும் போதே ஒருவர் இறந்து விட்டார். இதையடுத்து 20 பேர் மீதான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடந்தது. இவ்வழக்கில் அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில், நேற்று நீதிபதி சுபா அன்புமணி தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.
4-ந்தேதிக்கு தள்ளி வைப்பு
இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 20 பேர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது தவிர கோர்ட்டு வளாகத்திலும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து இந்த கொலை வழக்கு வந்த போது, இவ்வழக்கின் தீர்ப்பை அடுத்த மாதம்(மார்ச்) 4-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கருதி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் தேவனாம்பட்டினம் மற்றும் சோனாங்குப்பம் மீனவ கிராமங்களில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின்பேரில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டதும் பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது.