கொடுமுடியில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்; தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில்- ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
கொடுமுடியில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
கொடுமுடியில் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த தொழிலாளிக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
12 வயது சிறுமி
ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 40). சலவை தொழிலாளி. இவர் அந்த பகுதியில் உள்ள கூலி தொழிலாளியின் வீட்டுக்கு சென்று வந்தார். அப்போது அந்த தொழிலாளியின் 12 வயது மகளுக்கு சாக்லெட், பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பார். கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ந் தேதி காலையில் சிறுமியின் தந்தை வேலைக்கு சென்று இருந்தார். முருகேசன் சிறுமியின் வீட்டுக்குள் சென்று தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து சென்றுவிட்டார். தந்தை வீட்டுக்கு வந்த பிறகு சிறுமி, நடந்த விவரத்தை தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில் கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், முருகேசன் மீது போலீசார் ஈரோடு மகளிர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
3 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அவர், குற்றம்சாட்டப்பட்ட முருகேசனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், மற்றொரு சட்டப்பிரிவின் கீழ் ஒரு ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறி உள்ளார். இந்த தண்டனைகளை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளதால், முருகேசனுக்கு மொத்தம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.