நீதி.. தர்மம்.. உண்மை.. வென்றுள்ளது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி


நீதி.. தர்மம்.. உண்மை.. வென்றுள்ளது - சேலத்தில் எடப்பாடி பழனிசாமி பேட்டி
x
தினத்தந்தி 25 Aug 2023 6:16 AM GMT (Updated: 25 Aug 2023 7:37 AM GMT)

கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம்,

அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் வழக்கில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு இன்று தீர்ப்பு வழங்கினர். அதில் அதிமுக தீர்மானங்களுக்கு எதிரான ஓபிஎஸ் உள்ளிட்டோரின் மேல்முறையீடு வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு அளித்ததால் தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும் தீர்மானங்களுக்கு தடை விதித்தால் கட்சியின் செயல்பாட்டிற்கு பெரும் பாதிப்பு ஏற்படும் எனவும் பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளனர். சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பு குறித்து, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"நீதி, தர்மம், உண்மை வென்றுள்ளது. அதிமுக என்பது ஒன்றுதான். அதிமுக பலமாக இருக்கிறது. அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை உயர்நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும். கட்சிக்கு எதிரானவர்களை அதிமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் என்னை சம்பந்தப்படுத்தி பேசுவது தவறான விஷயம். ஆட்சியில் இருக்கும்போது சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளோம். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும். அதிமுக பலம் பொருந்திய கட்சியாக உருவாகியுள்ளது. தென் மாவட்டத்தில் அதிமுக மாநாடு நடத்த முடியாது என்று சொன்னார்கள், ஆனால் இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் அதிமுகவின் எழுச்சி மாநாடு நடைபெற்றுள்ளது. கட்சியால் வளர்ந்தவர்கள் கட்சிக்கு துரோகம் செய்தனர்." என்று கூறினார்.


Next Story