மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் - ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்


மயிலாடுதுறை துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவம் - ஏராளமான பக்தர்கள் புனித நீராடினர்
x
தினத்தந்தி 16 Nov 2023 3:55 PM IST (Updated: 16 Nov 2023 5:33 PM IST)
t-max-icont-min-icon

துலாகட்ட காவிரியில் கடைமுக தீர்த்தவாரி உற்சவத்தில் காவிரி கரையில் அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்தி சுவாமிகள் எழுந்தருளினர்.

மயிலாடுதுறை,

மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி அனைத்து கோயில்களிலும் ஐப்பசி மாதம் நடைபெறும் துலா உற்சவம் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா ஆகும். இதில் மயிலாடுதுறையில் காவிரி கரையில் உள்ள மயூரநாதர், வதான்யேஸ்வரர், ஐயாரப்பர், புனுகீஸ்வரர், காசி விஸ்வநாதர், தெப்பக்குளம் விஸ்வநாதர், படித்துறை விஸ்வநாதர் உள்ளிட்ட சிவாலயங்களில் ஐப்பசி மாதம் கடைசி பத்து நாட்கள் விழா நடைபெறுவது வழக்கம் ஆகும்.

கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய இந்த விழாவில் திருத்தேர் உற்சவம், திருக்கல்யாணம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நிறைவுற்றன. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காவிரி தீர்த்தவாரி நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில் ஆற்றின் இரு கரைகளிலும் அனைத்து கோவில்களில் இருந்தும் சுவாமி அம்பாள் மற்றும் பஞ்ச மூர்த்திகள் பக்தர்களுக்கு காட்சியளித்து தீர்த்தவாரி நடைபெற்றது. மேலும் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை செய்து தீர்த்தவாரி நடைபெற்றது. இதற்காக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் புனித நீராட வருகை தந்துள்ளனர்.

இந்த புனித நீராடலில் 20ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் ஒரே இடத்தில் நீராடுவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் மீனா தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் 30 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காலை முதலே காவிரியின் இரு கரைகளிலும் பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். தடுப்புகள் அமைத்து தனித்தனியே குளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் இருபுறமும் உள்ள சாலைகளில் வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டு, நடந்து செல்ல மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புனித நீராடும் பக்தர்கள் அருகில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்துவிட்டு திரும்பி செல்கின்றனர். இன்று துலா உற்சவத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


Next Story