சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்


சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
x
தினத்தந்தி 18 Jan 2024 10:00 PM GMT (Updated: 18 Jan 2024 10:00 PM GMT)

இன்று முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது.

சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் நேற்று ரூ.21 கோடியே 53 லட்சம் செலவில் குழந்தைகள் நல திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவந்தார்.

பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் 6 அறிவிப்புகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள அறிவிப்புகள் அடுத்த நிதிநிலை அறிவிப்புக்கு முன்பு செயல்பாட்டுக்கு வரும். தமிழ்நாட்டில் குழந்தை இறப்பு விகிதம் 2020-ம் ஆண்டு கணக்கின்படி ஒவ்வொரு ஆயிரம் குழந்தைகளுக்கும் 13 என்ற வகையில் இருந்தது.

பல்வேறு குழந்தைகள் நல திட்டங்களை செயல்படுத்தியதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக இறப்பு விகிதம் குறைந்துள்ளது. அதன்படி ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற விகிதத்தில் குறைந்துள்ளது. சிசு இறப்புகளை குறைப்பதற்கு அனைத்து மாவட்டங்களிலும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் குழந்தைகளின் வீடுகளுக்கு சென்று, குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த விவரங்களை பணியாளர்கள் சேகரித்து ஆஸ்பத்திரிக்கு தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்திய வரலாற்றிலேயே வேறு எந்த மாநிலத்திலும் மருத்துவம் தொடர்பான மாநாடு நடத்தப்பட்டதில்லை. மருத்துவம், பல் மருத்துவம், ஆயுஷ், மருந்தகம், மறுவாழ்வு அறிவியல் ஆகியவை தொடர்பான சுகாதார திட்டங்களை மாநாடு மூலம் ஆய்வு செய்வதும், பல்வேறு நாடுகளில் இருந்து டாக்டர்கள் பங்கேற்கும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 21-ந்தேதி வரை 3 நாட்கள் சென்னை வர்த்தக மையத்தில் கலைஞர் நூற்றாண்டு பன்னாட்டு மருத்துவ மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டில் 11 ஆயிரம் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். டெல்லி, மேற்கு வங்காளம், தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மேகாலயா, அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து 182 மருத்துவ துறையை சேர்ந்த பேச்சாளர்கள் இந்த மாநாட்டில் உரையாற்ற உள்ளனர்.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் இருந்து புகழ்பெற்ற 28 மருத்துவ வல்லுனர்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். மருத்துவ பேராசிரியர்கள், முதுநிலை மருத்துவ மாணவர்கள் 'மருத்துவத்தின் எதிர்காலம்' என்ற கருப்பொருளில் 600 அறிவியல் ஆராய்ச்சி சுருக்கங்களை வெளியிட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story