கலைமாமணி விருது தேர்வு குழுவை 3 மாதத்தில் சீரமைக்க வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கலைமாமணி விருது தேர்வு குழுவை 3 மாதத்தில் சீரமைக்க வேண்டும் -மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கலைமாமணி விருது பெறுபவர்களை தேர்வு செய்யும் குழுவை 3 மாதத்தில் சீரமைக்க வேண்டும் என்றும், விருதுக்கு தகுதியானவர்கள் யார்? என்பதை வெளியிட வேண்டும் எனவும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியைச் சேர்ந்த சேர்மத்துரை, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருதுகள் வழங்குவது தொடர்பாக விதிகளையும், நிபுணர் குழுவை அமைக்கவும், அவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதேபோல நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் தாக்கல் செய்த மனுவில், "கடந்த 2019-2020-ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது கடந்த 2021-ம் ஆண்டில் பல்வேறு தகுதியற்ற நபர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவற்றை திரும்ப பெறவும், தகுதியானவர்களுக்கு விருது வழங்கவும் உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.

தகுதியானவர்களுக்கு விருது

இந்த வழக்குகளை நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, 2019-20-ம் ஆண்டுக்கான விருது வழங்குவதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கலைஞர்களை நிபுணர்குழு தேர்ந்தெடுத்தது. நிபுணர்குழுவில் பல்வேறு அனுபவங்களை கொண்ட பிரபலங்கள் இடம் பெற்றுள்ளனர். தகுதியானவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.

நிபுணர் குழுவை சீரமையுங்கள்

இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பண்டைய தமிழ் கலாசார கலைகளை பாதுகாத்து, கலைஞர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசின் இயல், இசை நாடக மன்றம் எடுத்து வருகிறது. இந்த விருதுகளை வழங்குவதன் மூலம் நமது பழமையான கலாசாரத்தை எதிர்கால சந்ததியினருக்கு இந்த மன்றம் எடுத்து செல்கிறது.

இந்த விருதுக்கான தகுதிகள், சாதனை போன்ற விதிமுறைகள் வகுக்கப்படவில்லை. அதை எந்த பாகுபாடும் இன்றி தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்த கோர்ட்டு ஏற்கிறது. அந்த வகையில் கலைமாமணி விருதுகளை தகுதியான நபர்களுக்கு வழங்கும் வகையில் கலைஞர்களை தேர்வு செய்யும் நிபுணர் குழுவை 3 மாதத்தில் சீரமைக்க வேண்டும்.

வழிகாட்டுதல்களை ஏற்படுத்துங்கள்

விருது பெற தகுதியானவர்கள் யார், யார்? என்பது தொடர்பான வழிகாட்டுதல்களை ஏற்படுத்தி, அதை மன்றத்தின் துணை விதிகளுடன் இணைத்து, இந்த விவரத்தை அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட வேண்டும்.

வெளிப்படைத்தன்மை, உண்மைத்தன்மை, பாரபட்சமின்றி தேர்வு நடவடிக்கை இருக்க வேண்டும். வழிகாட்டுதல்களின்படி தகுதியானவர்களுக்கு மட்டுமே விருது வழங்கப்பட வேண்டும்.

அதேபோல 2019-20-ம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கியது குறித்து முறையாக அனைத்து தரப்பினரும் விளக்கம் அளிக்க வாய்ப்பளித்து விசாரித்து உரிய நடவடிக்கையை இயல், இசை, நாடக மன்றம், தமிழக சுற்றுலா-கலாசாரத்துறை எடுக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.


Next Story