கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் பொறுப்பேற்பு மாணவி இறப்பு தொடர்பாக வதந்தி பரப்பாமல் பொதுமக்கள் அமைதி காக்க வலியுறுத்தல்


கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் பொறுப்பேற்பு  மாணவி இறப்பு தொடர்பாக வதந்தி பரப்பாமல் பொதுமக்கள் அமைதி காக்க வலியுறுத்தல்
x

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று பொறுப்பேற்றார். மாணவி இறப்பு தொடர்பாக வதந்தி பரப்பாமல் பொதுமக்கள் அமைதி் காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் கலவரம் சம்பவம் தமிழகத்தையே உலுக்கி இருக்கிறது. இத்தகையை பரபரப்பான சூழலில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரிந்த கலெக்டர் ஸ்ரீதர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வக்குமார் ஆகியோர் நேற்று முன்தினம் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதையடுத்து புதிய போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்ட பகலவன் நேற்று காலை உடனடியாக பொறுப்பேற்றார். அவரை தொடர்ந்து புதிய கலெக்டராக வேளாண்மை கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து வந்த ஷ்ரவன் குமார் ஜடாவத் நேற்று மாலை கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

சட்டப்படி நடவடிக்கை

பின்னர் கலெக்டர் ஷரவன் குமார் ஜடாவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலனாய்வு குழு நியமனம் செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும்.

மாணவி ஸ்ரீமதி இறப்பு தொடர்பாக வதந்திகளை பரப்பாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த நான், ஏற்கனவே திருப்பூரில் சப்- கலெக்டராகவும், கோவை ஆணையராகவும், அதன்பிறகு குடிநீர் வடிகால் வாரியம், வேளாண்மை கூடுதல் இயக்குனராக பணிபுரிந்து தற்போது கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்று உள்ளேன்.

வேளாண்மை நிறைந்த மாவட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வேளாண்மை நிறைந்த மாவட்டமாக இருப்பதால் விவசாயிகளுக்கு வேளாண்மை சார்ந்து அரசு மூலம் வழங்கப்படும் திட்டங்கள் மற்றும் மானியங்கள் முழுமையாக சென்றடைய பாடுபடுவேன்.

வாரந்தோறும் திங்கட்கிழமை நடக்கும் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுக்கப்படும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் ஒவ்வொரு துறை வாரியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட மனுக்கள் விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்களின் விபரங்கள் தெரிவிக்கப்படும். கல்வி, மருத்துவம் மற்றும் சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு மின்சாரம் ஆகியவற்றுக்கு அதிக கவனம் செலுத்துவேன். பொதுமக்களின் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் விஜய் பாபு மற்றும் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர். புதிதாக உதயமான கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இவர் 3-வது கலெக்டர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

1 More update

Next Story