காளியம்மன் கோவில் பொங்கல் விழா
தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள காளியம்மன் கோவில் பொங்கல் விழா நடந்தது.
தேனி அருகே உள்ள தப்புக்குண்டு கிராமத்தில் லட்சுமி நரசிங்கப் பெருமாள், காளியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 11-ந்தேதி தொடங்கியது. விழாவில், மாடு சேசவிடுதல், கரும்பு பிரசாதம் வழங்குதல், பல்லையம் பிரித்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் தொடர்ச்சியாக நேற்று சாமி செய்தல், மாவிளக்கு எடுத்தல், காளியம்மனுக்கு பொங்கல் வைத்தல், முளைப்பாரி ஊர்வலம், தீச்சட்டி எடுத்தல், மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அதிகாலையில் கோவில் முன்பு ஏராளமான பெண்கள் மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். பின்னர், கோவில் முன்பு ஏராளமான பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் சிறப்பு அலங்காரத்தில் காளியம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.