தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் முதலிடம் வகிக்கும் கள்ளக்குறிச்சி


தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் முதலிடம் வகிக்கும் கள்ளக்குறிச்சி
x

தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடம் வகிப்பதோடு, அதிகபட்சமாக 16.75 சதவீதம் கரும்பு இங்கிருந்துதான் கிடைக்கிறது. மேலும் சாகுபடி பரப்பை அதிகரிக்கவும் கோரிக்கை எழுந்து இருக்கிறது.

கடலூர்,

உலக அளவில் கரும்பு சாகுபடியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில், உத்தரபிரதேசம் முதலிடத்திலும், 2-வது இடத்தில் மராட்டியமும், 3-வது இடத்தில் கர்நாடகமும், 4-வது இடத்தில் தமிழகமும் இருக்கிறது.

கரும்பை பொறுத்தவரை சர்க்கரை ஆலை கரும்புகள், பன்னீர் கரும்புகள் என அதிகம் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் 1.27 லட்சம் ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதில் தமிழக அளவில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. அதாவது, இங்கு 21 ஆயிரத்து 394 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கரும்பு சாகுபடியில் அதிகபட்சமாக 16.75 சதவீதம் கரும்பு இங்கு இருந்து தான் கிடைக்கிறது. இதற்கு அடுத்ததாக கடலூர் மாவட்டத்தில் 14 ஆயிரத்து 850 ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் 11.13 சதவீத கரும்பு கிடைக்கிறது.

சர்க்கரை ஆலைகள்

ஈரோட்டில் 14,211 ஹெக்டேர் பரப்பளவிலும், விழுப்புரத்தில் 12,512 ஹெக்டேர் பரப்பளவிலும் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் கரும்பு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. முன்பு 47 சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன. தற்போது அரசு, தனியார் சர்க்கரை ஆலைகள் என 36 சர்க்கரை ஆலைகள் மட்டுமே உள்ளன.

இங்கு ஆலைக்கு தகுந்தாற்போல், கரும்பு அரவை செய்யப்பட்டு, சர்க்கரை தயாரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் சர்க்கரை இருப்பு போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. சர்க்கரையில் இருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களும் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது.

சாகுபடி பரப்பளவை அதிகரிக்க...

கடந்த 2016-ம் ஆண்டுக்கு முன்பு கரும்பு சாகுபடி அதிகமாக இருந்தது. 2017-ம் ஆண்டு காலக்கட்டத்தில் வறட்சியின் காரணமாக கரும்பு சாகுபடி பரப்பளவு குறைந்தது. அப்போது 85 ஆயிரம் ஹெக்டேரில் தான் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்திருந்தனர். தற்போது 1 லட்சத்து 27 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் இந்த சாகுபடி பரப்பளவும் குறைவு தான்.

இதை அதிகரிக்க தேவையான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கு எந்திரமயமாக்கல், கரும்புக்கு உரிய விலை, கரும்பு வெட்டியவுடன் பணம் பட்டுவாடா போன்றவற்றை செய்து கொடுத்தால் மேலும் சாகுபடி பரப்பு அதிகரிக்கும். தேவையான சர்க்கரையும் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை.


Next Story