கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் தொடர்பாக கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி நடந்த போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக்மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து கொளுத்தப்பட்டது. மேலும் போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் ஈடுபட்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளியில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கில் மேலும் 4 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயவேல் (வயது 22), இப்ராஹிம் (வயது 26), ராமலிங்கம் (வயது 56) விஜய் (வயது 26) ஆகிய நான்கு பேரையும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் பரிந்துரையின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே 12 பேர் மீது குண்டர் சட்டத்தின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4 பேர் மீது குண்டர் சட்டம் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.






