கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் - டிஜிபி உத்தரவு


கள்ளக்குறிச்சி கலவரம்: மேலும் 55 போலீசார் சிறப்பு புலனாய்வு குழுவில் நியமனம் - டிஜிபி உத்தரவு
x

மாணவி ஸ்ரீமதி சாவுக்கு நீதி கேட்டு நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்து தமிழகத்தை உலுக்கியது.

சென்னை,

கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி செல்வி. இவர்களது மகள் ஸ்ரீமதி(வயது 17), மகன் சந்தோஷ்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி ஸ்ரீமதி பிளஸ்-2 படித்து வந்தார். சந்தோசும் அதே பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறான். இவன் தினசரி பள்ளி பஸ்சில் வீட்டுக்கு சென்று வந்தான்.

இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி விடுதியில் இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

இதில் மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக விசாரிக்கும் புலனாய்வு பிரிவில் மேலும் 55 போலீசாரை நியமனம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். கடலூர், வேலூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 12 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 55 பேர் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் சரக டிஐஜி தலைமையிலான 18 அதிகாரிகளின் கீழ் இவர்கள் பணியாற்றுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 55 பேரும் கலவரம் தொடர்பாக 3 பிரிவுகளாக பிரிந்து பணியாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story