கள்ளக்குறிச்சி கலவரம்: டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை - சிறப்பு புலனாய்வு குழு தகவல்


கள்ளக்குறிச்சி கலவரம்: டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை - சிறப்பு புலனாய்வு குழு தகவல்
x

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில் டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி இருந்த மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்தார். பள்ளி நிர்வாக தரப்பில் ஸ்ரீமதி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.

ஆனால் இதை அவரது பெற்றோர் ஏற்கவில்லை, சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி போராட்டத்தை முன்னெடுத்து வந்தனர். இதில் கடந்த 17-ந்தேதி பல்வேறு அமைப்பினர் நடத்திய போராட்டம், கலவரமாக வெடித்தது. இதில் பள்ளி சூறையாடப்பட்டு, பள்ளி பஸ்கள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

மாணவி மரணம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினரும், சமூக வலைதளங்கள் மூலம் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் பற்றி சைபர் கிரைம் போலீசாரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பான விசாரணையில் டெலிகிராம் நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டவர்களின் விவரங்களை டெலிகிராம் நிர்வாகம் தர மறுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

வாட்ஸ் அப், முகநூல் நிறுவனம் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறது என்று சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. வாட்ஸ்ஆப் குழுக்களை காட்டிலும் டெலிகிராம் குழுவில் தான் அதிகப்படியான நபர்கள் இணைந்துள்ளதாகவும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story