கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் - நீதிமன்றம் உத்தரவு


கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி நிர்வாகிகள் 5 பேருக்கு ஒருநாள் சிபிசிஐடி காவல் - நீதிமன்றம் உத்தரவு
x

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம்.

சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 மாணவி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து நடைபெற்ற தொடர் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்துக்குள் புகுந்து சூறையாடியதோடு, வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன.

இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலானய்வு பிரிவினர் வழக்குப்பதிவுசெய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வீடியோ, கண்காணிப்பு கேமரா பதிவுகள், புகைப்படம் ஆகியவற்றையும், போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற வாகனங்களில் உள்ள பதிவெண் ஆகியவற்றை கொண்டு ஆள் அடையாளம் கண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பாக பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, பள்ளி முதல்வர் சிவசங்கரன், வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகியோர் மீது தற்கொலைக்கு தூண்டுதல் (பிரிவு 305), பாதுகாப்பில் உள்ளவருக்கு தொல்லை கொடுத்தல் (பிரிவு 75) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 5 பேரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் கைதான பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்பட 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கக்கோரி நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி புஷ்பராணி விசாரித்தார். அப்போது பள்ளி தாளாளர் உட்பட ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதனை தொடர்ந்து பள்ளி தாளாளர் உட்பட 5 பேரையும் ஒருநாள் காவலில் மட்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார்.

3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், ஒரு நாள் காவல் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இன்று மதியம் 12.30 மணி முதல் நாளை மதியம் 12.30 மணி வரை 5 பேருக்கும் சிபிசிஐடி காவல் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.


Next Story