உயிர் பலிக்காக காத்திருக்கும் கல்குவாரி குட்டை
திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், உயிர் பலிக்காக கல்குவாரி குட்டை காத்திருப்பது போல் உள்ளது.
ஒட்டன்சத்திரம் தாலுகா இடையக்கோட்டை ஆதிதிராவிடர் காலனி அருகே பழமையான கல்குவாரி குட்டை உள்ளது. சுமார் 40 அடி ஆழம் கொண்ட அந்த குட்டையில் தண்ணீர் எப்போதும் தேங்கி நிற்கிறது. தற்போது அந்த தண்ணீர் பாசி படர்ந்து பச்சைப்பசேல் என்று காட்சி அளிக்கிறது. குப்பைகளும் தேங்கி கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.
திறந்தவெளியில் தண்ணீர் தேங்கி நிற்பதால், யாரேனும் தவறி விழுந்து உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குடியிருப்பை ஒட்டி அந்த குட்டை இருப்பதால் அதன் அருகே சிறுவர்கள் ஆபத்தை உணராமல் விளையாடி கொண்டிருக்கின்றனர். எனவே உயிர்ப்பலி வாங்க காத்திருக்கும் அந்த குட்டையை சுற்றிலும் கம்பி வேலி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் செலவில் அந்த குட்டை நீச்சல் குளமாக மாற்றப்பட்டது. அதன்பிறகு ஊராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளாததால், போதிய பராமரிப்பு இன்றி தற்போது கல்குவாரி குட்டை பரிதாபமாக காட்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.