கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 5 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை போலீசாா் கீழே கொட்டி அழித்தனா்.
கச்சிராயப்பாளையம்,
கல்வராயன்மலையில் உள்ள விளை நிலங்களில் சாராயம் காய்ச்சப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரியாலூர் போலீசார், தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு, பட்டிவளவு கிராமங்களில் உள்ள விளை நிலங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் போடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 900 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி, அவற்றை கீழே கொட்டி அழித்தனர். மேலும் சாராய ஊறல் பதுக்கி வைத்திருந்த செல்வராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் அத்திப்பாடி கிராமத்தில் குமார் மற்றும் கோவிந்தன் ஆகியோருடைய கரும்பு தோட்டத்தில் போடப்பட்டிருந்த 4 ஆயிரத்து 100 லிட்டர் சாராய ஊறலையும் போலீசார் கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனர். மேலும் இதுதொடர்பாக குமார், கோவிந்தன் ஆகியோர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.