திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்


திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
x

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சென்னை

திருவொற்றியூரில் உள்ள தியாகராஜசாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

தினமும் உற்சவர் சந்திரசேகரர் சூரிய, சந்திர பிரபை, நாகம், சிம்மம், பூதம், அதிகார நந்தி, அஸ்தமானகிரி, புஷ்ப பல்லக்கு, குதிரை, இந்திர விமானம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாட வீதியில் உலா வந்தார். கடந்த சனிக்கிழமை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இந்த நிலையில் விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் நேற்று காலை நடைபெற்றது. இதில் உற்சவர் கல்யாண சுந்தரர், திரிபுரசுந்தரி அம்மன் பட்டு வஸ்திரம் அணிந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளினர். காலை 9.30 மணிக்கு தொடங்கிய திருமண வைபவத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் நடத்தப் பட்டது.

கல்யாண சுந்தரருக்கு பூணூல் அணிவிப்பு, காப்பு கட்டுதல் நடைபெற்றது. பின்னர் மங்கல வாத்தியங்கள் முழங்க கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் திருவொற்றியூர் எம்.எல்.ஏ. கே.பி.சங்கர், மண்டலக்குழு தலைவர் தி.மு.தனியரசு, பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஜெய்கணேஷ் உள்ளிட்ட வடசென்னை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் கூட்டமாக காணப்பட்டது.

திருக்கல்யாணம் முடிந்ததும் பக்தர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. பெண்கள் வேண்டுதல் நிறைவேறியதையொட்டி மஞ்சள், குங்குமம், தாலிக்கயிறு, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பின்னர் பால், பழம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. முடிவில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் உபயதாரர்கள் சார்பில் 5 ஆயிரம் பேருக்கு கோவில் வளாகத்தினுள் திருமண விருந்து வழங்கப்பட்டது. மதியம் 2 மணிக்கு 63 நாயன்மார்கள் மாடவீதி உற்சவம் நடைபெற்றது. இரவு கல்யாணசுந்தரருக்கும், சங்கிலி நாச்சியாருக்கும் குழந்தை ஈஸ்வரர் மகிழ மரத்தடியில் காட்சி தரும் மகிழடி சேவை நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் செய்து இருந்தனர். திருக்கல்யாண விழாவை யொட்டி கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. உதவி கமிஷனர் முகமது நாசர், இன்ஸ்பெக்டர் காதர்மீரா ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story